ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 22ஆம் திகதி அரச தலைவர்கள் மாநாட்டு அமர்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அதனையடுத்து 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் 18ஆம் திகதி நியூ யோர்க் சென்றடைந்தனர்.
இலங்கை தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நம்பிக்கையுடன் செயற்படுவதற்கான சூழலை கட்டியெழுப்புதல், நிலையான இயல்பு நிலையை மீண்டும் உருவாக்குதல், மக்களின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பை புத்துயிர் பெறச் செய்தல் என்ற பொருளில் இம்முறை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அரச தலைவர்கள் அமர்வு இன்று 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அமர்வின் இரண்டாம் நாள் பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரை நிகழ்த்தவுள்ளார். அதேவேளை 23ஆம் திகதி நடைபெறவுள்ள உணவுத் தொகுதி மாநாடு மற்றும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மின் சக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்கேற்று கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.
மாநாட்டு அமர்வின் இடைப்பட்ட காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளினதும் அரச தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.