நினைவுகூரும் உரிமையை தடுப்பது தவறு

” போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

” போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நடைமுறை உலக நாடுகளிலும் உள்ளது. 2ஆம் உலகப்போரில் உயிரிழந்த ஜேர்மன் படையினரை, பிரிட்டன் படையினர் வருடாந்தம் நினைவுகூருகின்றனர். அதேபோல ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டவர்களை அக்கட்சியினர் நினைவுகூருகின்றனர். அதில் தவறு கிடையாது. எனவே, நினைவுகூரலை தடுப்பதற்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கூட கண்டித்துள்ளது.

அதேவேளை, பொருளாதாரத் தடைக்கு அஞ்சியே மஹிந்த ராஜபக்ச முன்கூட்டியே தேர்தலுக்கு சென்றார். சர்வதேச விவகாரங்களின்போது மஹிந்த ராஜபக்ச பயணித்த வழியிலேயே கோட்டாபய ராஜபக்சவும் பயணிக்கின்றார். முதல் ஆண்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் படுதோல்வி ஏற்பட்டுள்ளது. அடுத்த மார்ச் மாதம் என்ன செய்ய போகின்றீர்கள் ? இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.

எமது ஆட்சியின்போது தேசிய கீதத்தின் ஒரு பகுதி தமிழிலும் இசைக்கப்பட்டது. சர்வதேச சமூகம் இதனை வரவேற்றது. ஜி -7 மாநாட்டுக்கு சென்றிருந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பிரதான மேசைக்கு அழைத்தனர். அவ்வாறானதொரு நம்பிக்கையை நாம் ஏற்படுத்தினோம். சிறுபான்மையின மக்களை துன்புறுத்தும் அரசுக்கு ஒருபோதும் சர்வதேச உதவி கிடைக்காது.” – என்றார்.

Related Articles

Latest Articles