” சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள் திடீரென கைது செய்யப்பட்டது ஏன்? நாமல் குமார என்பவரின் வருகையின் பின்னணி என்ன? அரச உளவு சேவை பிரதானி எதற்காக அறிக்கைகள் மறைத்தார், தற்போது ஏன் அரச சாட்சியாளராக மாறியுள்ளார். இவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் அவசியம்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்தபோது 5 ஆம் மாதம் 19 ஆம் திகதி அரச உளவுப்பிரிவின் அறிக்கையொன்று கிடைத்திருந்தது. இது தொடர்பில் துறைசார் அமைச்சர் என்ற அடிப்படையில் சிஐடி மற்றும் ரிஐடி பணிப்பாளர்களுடன் நான் கலந்துரையாடல்களை நடத்தினேன்.
இதனையடுத்து சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக 7 மாதம் 2 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நீல பிடியாணைக்கூட பெறப்பட்டிருந்தது. ஆனால் சஹ்ரானை கைது செய்ய நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவிலிருந்து நான் நீக்கப்பட்டேன். மீண்டும் அந்தப் பதவி எனக்கு கிடைக்கவில்லை. அந்த காலப்பகுதியில்தான் சூழ்ச்சியொன்றும் இடம்பெற்றது. நாமல் குமார என்பவர் திடீரென தோன்றி, முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளை கொலை செய்ய சூழ்ச்சி இடம்பெற்றதாகக் தகவல் வெளியிட்டார். இறுதியில் என்ன நடந்தது, சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ரிஐடி பணிப்பாளர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் சிஐடி பணிப்பாளர் சானி அபேசேகரவும் கைது செய்யப்பட்டார். நாமல் குமார வெளியிட்ட சம்பவத்துக்கு என்ன நடந்தது?
ஜுன் 7 முதல் ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை அரச உளவு பிரிவு பணிப்பாளர் எனக்கு எந்தவொரு அறிக்கையையும் அனுப்பவில்லை. பொலிஸ்மா அதிபருக்கு 12 அறிக்கைகள் அனுப்பியிருந்தாலும் அவ்வாறு அனுப்பட்ட அறிக்கைகளில் நான்கே எனக்கு அனுப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும்போதுதான் இது எனக்கு தெரியவந்தது. எதற்காக அறிக்கைகள் மறைக்கப்பட்டன. அவர் தற்போது அரச சாட்சியாக மாறியுள்ளார். இது தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும். மூன்று நாட்களாவது அவசியம்.” – என்றார்.
விவாதத்துக்கு அரசு தயாராகவே உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதிலளித்தார்.
