பிரசவ வலியுடன் சைக்கிளில் வைத்தியசாலை சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே ஆஸ்பத்திரி இருப்பதால் அவர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.

பிரசவ வலியுடனேயே அவர் சைக்கிளை ஓட்டி ஆஸ்பத்திரி போய் சேர்ந்தார். அங்கு சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் “முக்கியமான செய்தி! இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது. ஆச்சரியப்படும் விதமாக இப்போது எங்களிடம் நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை உள்ளது. அவளின் தந்தையை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related Articles

Latest Articles