9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றதன்மூலம் கண்டி மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார் வேலுகுமார்.
இலங்கையில் 1947 இல் தொகுதிவாரியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மண்ணிலிருந்து இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றிருந்தனர்.
எனினும், 1948 இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் 4 தசாப்தங்களுக்கு மேலாக கண்டி மாவட்ட தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட இராஜரட்னம் வெற்றிபெற்றார். அதன்பின்னர் 2000, 2001, 2004, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ் வேட்பாளர் எவரும் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் 2015 இல் நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.கவின் பட்டியலில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் வெற்றிபெற்றார்.இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கு மீண்டும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
இதன்படி கண்டி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் தெரிவான தமிழ் அரசியல்வாதி என்ற சாதனையை புரிந்துள்ளார்.