” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான இந்த அரசு பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க இடமளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்நாட்டில் ஏற்படப்போகும் நெருக்கடி நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்கள் இன்று வீதிக்கி இறங்கிவிட்டனர். நகரங்களை முடக்கி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக்கூடும் என நாம் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினோம். ஆனால் அந்த காகம் (பஸில் ராஜபக்ச) எமது கருத்துகளை உள்வாங்கவில்லை. பொருளாதாரம் சிறப்பான வழியில் பயணிப்பதாக மாயையை உருவாக்கியது.
அமைச்சரவையில் இருந்தவர்கள் அதனை ஏற்று செயற்பட்டனர். அந்த கர்மவினையைதான் இன்று எதிர்கொண்டுள்ளனர். பதவிகள் இன்றி, பின்வரிசையில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிவப்பு சால்வை போட்ட நபர்களால் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்மை அமைச்சரவையில் இருந்து நீங்கினர். இன்று எவரும் அங்கு இல்லை.
எனவே, பிரதமர் உள்ளடங்களான அரசு பதவி விலக வேண்டும். அரசியல் ஸ்தீரத்தன்மையை உருவாக்குவதற்காக சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். இதற்கு இடமளிக்காமல் பதவியில் நீடித்தால், நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கு ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றார்.