உக்ரைன் போரில் எந்த நாடேனும் தலையிட முயன்றால் “மின்னல் வேகத்திலான” பதிலடி ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து கருவிகளும் எம்மிடம் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை பயன்படுத்துவோம்” என்று அவர் குறிப்பிட்டார். பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை குறிப்பிடுவதாக அவரது இந்தக் கருத்து இருந்தது.
உக்ரைனின் நட்பு நாடுகள் அயுதங்களை வழங்க முன்வந்திருப்பதோடு ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனுக்கு உதவுவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதில் 50 விமான எதிர்ப்பு டாங்கிகளை அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்தது, உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க பிரிட்டனும் அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் “நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதாக” ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த வார ஆரம்பத்தில் கூறினார். அத்துடன், இந்த மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக மேற்கத்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தலைநகர் கியேவை சூழவுள்ள பகுதியில் இருந்து வாபஸ்பெற்ற ரஷ்யா டொன்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் பாரிய தாக்குதலை கடந்த வாரம் ஆரம்பித்தது.
எனினும் ரஷ்யப் படை உக்ரைனின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருவதாகவும் இழப்புகளை எதிர்கொண்டிருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த புதன்கிழமை உரையாற்றிய புட்டின், “உக்ரைனில் வெளியில் இருந்து யாரேனும் தலையிட முயன்று, ரஷ்யாவுக்கு மூலோபாய அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் எமது பதிலடி மின்னல் வேகத்தில் இருக்கும்” என்று எச்சரித்தார்.
“யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து கருவிகளும் எங்களிடம் உள்ளன. அவைகள் பற்றி நாம் தற்பெருமை காட்ட மாட்டோம், தேவைப்பட்டால் அவைகளை பயன்படுத்துவோம்” என்றும் புட்டின் கூறினார்.
அணுசக்தி கொண்ட அதிவேக, புவியீர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா அண்மையில் சோதித்திருந்தது. அவற்றை இடைமறிக்க மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் தோல்வியடையலாம் என்று கூறப்படுகிறது.