இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை – இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின், உருவப்படம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை அலுவலகத்தில் (சிஎல்எப்) குறித்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
மலையக காந்தி என போற்றப்படும் கே .இராஜலிங்கம் ஐயா, கண்டி மாவட்டத்தின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. (1947)
மக்களுக்காகவும், மக்களுக்கான தொழிற்சங்க – அரசியல் பணிகளை முன்னெடுப்பதற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இராஜலிங்கம் ஐயா, மறைந்த பின்னர் காங்கிரஸில் அவருக்கான மரியாதை கிட்டவில்லை. ராஜலிங்கம் ஐயாவின் குடும்பமும் ஓரங்கட்டப்பட்டது.
இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்த ஒருவருக்க, மே தினத்தில் இப்படியாவது அங்கீகாரம் கிடைத்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கண் திறப்பதற்காக சொந்த சொத்துகளையெல்லாம் விற்பனை செய்துவிட்டு பாடசாலை அமைத்த மகான் இவர். (இன்றைய புஸல்லாவை, சரஸ்வதி தேசிய கல்லூரி)
அரச பதவியை துறந்துவிட்டு, கூடாரம் அமைத்து தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அமுதூட்டிய ஆசான் இவர். (சங்குவாரி தோட்டம்)
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக தான் பயணித்த காரையே விற்பனை செய்துவிட்டு, பொது போக்குவரத்தில் வீடு திரும்பிய கர்ணன்.
குடும்ப வாழ்வில் இணைந்தால் சமூகப்பணிக்கு தாக்கம் வந்துவிடும் என்பதால் இறுதிவரை திருமணம் முடிக்காமல் தான் சார்ந்த மக்களுக்காகவே வாழ்ந்த தொழிற்சங்க துறவி இவர்.