‘கோல்பேஸ் தாக்குதல் அரச பயங்கரவாதம்’ – சஜித் சீற்றம்!

“அரசு மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதேவேளை, காலிமுகத்திடலில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்களின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த காலங்களில் 69 இலட்சம் மக்கள் ஆணை பெற்ற முன்னாள் ஜனாதிபதி கூட மக்கள் கருத்துக்குப் பணிந்து நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை இந்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்துகொள்வது மிகவும் பொருத்தமானது.

பின்னர் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி நியமிக்கப்பட்டார். இந்நியமனம் 22 மில்லியன் மக்களின் விருப்பத்தின் பிரகாரமின்றி மாறாக கோட்டாபய ராஜபக்சவுக்குச் சாதகமான தரப்பால் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்கள் கருத்துக்குப் பணிந்து செயற்பட்டோம். 225 பேரும் ஒன்றே என்ற சமூகக் கருத்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசு மேற்கொள்ளும் நல்ல பணிகளில் எந்நிலையிலும் பின்வாங்காது எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எப்போதும் ஆதரவை வழங்குவோம்” – என்றார்.

Related Articles

Latest Articles