தேரரின் கருத்துக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் கண்டனம்

திருக்கோணேச்சரம் என்பது பாடல்பெற்ற திருத்தலமாகும். எனவே, சிவன்கோவில் தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்தானது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்கவேண்டும் என்பதுடன் புத்தாசசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்கவேண்டும் – என்று அகில இலங்கை இந்து மகா சபாவின் தலைவரும், இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளருமான சிவஶ்ரீ வேலு சுரேஷ்வர சர்மா தெரிவித்தார்.

திருகோணோச்சரம் கோவில் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது என எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நேற்று (08) கருத்து வெளியிடுகையிலேயே சுரேஷ்வர சர்மா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

‘” திருக்கோணேச்சரம் தொடர்பில் தேரர் வெளியிட்டுள்ள இவ்விதமான கருத்தானது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

இலங்கையானது இராவணன் ஆண்ட பூமியாகும். அதற்கு சான்றாக சீதாஎலிய கோவில் இருக்கின்றது. இந்தியாவில் இருந்து அனுமான் இலங்கை வந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது. ராவண எல்ல இருக்கின்றது. குகைகள் இருக்கின்றன. இராவணன் என்பவர் சிவபக்தன் இதற்கான சான்றுகளும் உள்ளன.

இந்நிலையில் தேரர் வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கதாகும். இந்துமத குரு என்ற அடிப்படையில் கவலையும் அடைகின்றேன். எனவே, ஆலய நிர்வாகத்தினர், சில ஆதாரங்களை புத்தாசன அமைச்சுக்கு வழங்குவதன்மூலம் ஏதோவொரு தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் என நம்புகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles