டலஸை ஆதரித்துவிட்டு, ரணிலிடம் எப்படி அமைச்சு பதவிகளை பெறுவது? மனோ, திகாவிடம் ராதா அணி கேள்வி!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை ஏற்காது, வெளியில் இருந்து சர்வகட்சி ஆட்சிக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அண்மையில் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.
இதில் கலந்து கொண்டவர்கள்,

” நாட்டில் தற்போது எற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக அனைத்து மக்களும் பாரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளார்கள். தற்போது இருக்கின்ற பொருளாதார நிலையில் எந்தவிதமான அபிவிருத்தியையும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

மேலும் சர்வகட்சி அரசாங்கத்தில் குறைந்த அளவிலான அமைச்சர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாட்டு மக்களும் போராட்டக்காரர்களும் விரும்புகின்றார்கள்.சர்வதேசமும் அதனையே விரும்புகின்றது.எனவே அதற்கு வழிவிட்டு நாம் விட்டுக் கொடுப்புடன் ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும். ” – என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சர்வக்கட்சி அரசாங்கத்தை மேலும் சிக்கலில் கொண்டு செல்லாமல் நாம் வெளியில் இருந்து கொண்டு முழுமையான ஆதரவை வழங்கி மக்களுக்கு நல்லது நடப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவையே இருக்கின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டதன் காரணமே கொள்கையுடன் நாம் செயற்பட வேண்டும் என்பதே.இந்த கூட்டணி எந்த காரணம் கொண்டும் சிதைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் இருக்கின்றது.நாம் எமது மக்களின் நன்மை கருதி இந்த கூட்டணியை பாதுகாக்க வேண்டிய தேவை எம் அனைவருக்கும் இருக்கின்றது.அந்த கூட்டு பொறுப்பை நாம் மதித்து நடக்க வேண்டும்.” – எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நாம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யக்கூடாது என்ற காரணத்தினாலேயே டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தோம்.எனவே அன்று ஒரு கொள்கையும் இன்று ஒரு கொள்கையுடனும் செயற்பட முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலையக மக்கள் முன்னணி கொள்கைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.எனவே நாம் முற்போக்கு கூட்டணியாகவும் கொள்கையுடன் செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த முடிவுகளை நாம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles