பதிலடி கொடுத்து 1,000 சதுர கி.மீ. பகுதிகளை மீட்டது உக்ரைன் படை!

இம்மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 1,000 சதுர கி.மீ. (390 சதுர மைல்) நிலப்பரப்பை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக டசின் கணக்கான குடியேற்றங்களை மீண்டும் கைப்பற்றியதாகவும் வழங்கமான மாலை நேர உரையில் நேற்று கருத்து வெளியிட்ட உக்ரேனிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உக்ரேனிய வீரர்கள் முக்கிய கிழக்கு நகரமான பாலக்லீயாவை இறுதியாகக் கைப்பற்றியதாககவும் அவர் கூறினார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து கணிசமான பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுள்ளது இந்தப் போரின் போக்கை மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.

காா்கிவில் தங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி, போா் முனையில் ரஷ்யப் படையினரை எதிா்த்து சண்டையிட்டு வரும் அனைத்து படையினருக்கும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கார்கிவ் நகரில் மட்டும் 700 சதுர கி.மீ. பரப்பளவை ரஷ்யப் படையினரிடமிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உயரதிகாரி ஒலெக்ஸி கிரமோவ் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கார்கிவ் நகர்ப் பகுதியில் ரஷ்ய கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து உக்ரைன் படையினா் 50 கி.மீ. வரை முன்னேறியுள்ளனர். அந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.

உக்ரைன் இராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் காா்கிவ் மற்றும் பிவ்டென்னி புஹ் திசைகளில் 700 சதுர கி.மீ. பரப்பளவிலுள்ள நிலப் பகுதி ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனவும் ஒலெக்ஸி கிரமோவ் கூறினார்.

ரஷ்யப் படையினா் மீது மேற்கொண்டு வரும் எதிா்த் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து புள்ளிவிவரங்களுடன் உக்ரைன் இராணுவம் அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Related Articles

Latest Articles