உக்ரைனிய போருக்கான இராணுவ அணிதிரட்டல் ஒன்றை தவிர்ப்பதற்கு ரஷ்ய ஆண்கள் நாட்டை விட்டு தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பகுதி அளவான இராணுவ அணிதிரட்ட ஒன்று பற்றி ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை விடுத்தது தொடக்கம் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வரிசை அதிகரித்துள்ளது.
புட்டினின் அறிவிப்பின்படி உக்ரைன் போருக்கான 300,000 மேலதிக படையினர் அணிதிரட்டப்படவுள்ளனர்.
எனினும் போருக்கு தகுதியுடைய வயது கொண்ட ஆண்கள் தப்பிச் செல்வதான கூற்று மிகைப்படுத்தப்பட்டது என்று ரஷ்ய அரசு குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஜோர்ஜியாவுடனான எல்லையில் பல மைல் தூரத்துக்கு வாகன வரிசை நீண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதியின் அறிவிப்பு வந்த உடனேயே கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டு எல்லைக்கு வந்ததாக பெயர் குறிப்பிடாத ஆடவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விசாவிற்கு விண்ணப்பிக்காமல் ரஷ்யர்கள் நுழையக்கூடிய சில அண்டை நாடுகளில் ஜோர்ஜியாவும் ஒன்றாகும். ரஷ்யாவுடன் 1,300 கி.மீ (800 மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து செல்வதானால் ரஷ்யர்களுக்கு விசா தேவை. இந்த நிலையில், ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து கூறுகிறது. ஆனால், அது சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்தது.
ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு விமானம் மூலம் எளிதாக செல்லக் கூடிய இடங்களாக இஸ்தான்புல், பெல்கிரேட் அல்லது டுபாய் ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. இராணுவ அணி திரட்டல் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டு விலை உயர்ந்துள்ளது. சில இடங்களுக்கு பயணச்சீட்டுகள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.
துருக்கிய ஊடகங்கள் ஒரு வழி பயணச்சீட்டு விற்பனை மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.