பொகவந்தலாவ, கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை
சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அங்கமுத்து கமலதாசன் என்பவரே நேற்று காலை (06) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி தேயிலை மலைப்பகுதிக்கு கொழுந்து ஏற்றச்சென்ற லொறி சாரதி, இது தொடர்பில் கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்ததை அடுத்து
தோட்ட நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர்.
தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் கேர்க்கஸ்வோல் தோட்ட நிர்வாகத்தின் உதவி முகாமையாளரினால் உயிரிழந்தவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து, ஹட்டனிலிருந்து தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதையடுத்து, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக
டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் உதவி முகாமையாளர் உட்பட நான்கு பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதவுசெய்துள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்
