21 ஆம் நூற்றாண்டில் மலையகத்தில் இப்படியும் ஒரு வகுப்பறை! மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்!!

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை – கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கவரவில ஆரம்ப பிரிவு பாடசாலையானது, ஆரம்பத்தில் தொழிற்சாலையிலேயே இயங்கிவந்துள்ளது.

காலப்போக்கில் பாடசாலைக்கென புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும்  இடப்பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறையால், தரம் மூன்று மற்றும் சங்கீத, நடன வகுப்புக்கள் குறித்த பாழடைந்த தொழிற்சாலையிலேயே இடம்பெற்றுவருகின்றன.

மேற்படி தொழிற்சாலையில் தற்போது பலகைகளும் கூரைத்தகடுகளும் கரையான் அரிப்பிற்கு உள்ளாகியுள்ளதோடு உறுதியற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் மழை நீரும் கூரை வழியாக உள்ளே வருகின்றது.

அதுமட்டுமல்ல பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில், முழு தொழிற்சாலையும் அசையும் நிலை காணப்படுகின்றதாம். இதனால் அத்தொழிற்சாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் உயிர் பயத்துடனே கற்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், எந்நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் எனவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கல்வி அமைச்சும் தலையிட்டு புதிய கட்டிடத்தையோ அல்லது பாதுகாப்பான சூழலையோ வழங்குமாறு பாடசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles