பாதாள உலக பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான வெல்லே சுரங்கவின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை, இப்பகேவத்தை சந்திக்கு அருகாமையில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக லங்காதீப தெரிவித்துள்ளது.
வெல்லே சுரங்கவின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் பயணித்த முச்சக்கரவண்டியை காரொன்று தடுத்து நிறுத்தியதில், அதில் இருந்து ஒருவர் T-56 துப்பாக்கியுடன் இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியும் வெல்லே சுரங்கவின் சகோதரரும் முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்றதன் விளைவாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தரையிலும் அருகாமையில் இருந்த சுவரிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் தரையில் நான்கு வெற்று உறைகள் காணப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.