கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது.
அவலத்தின் உச்சத்தில், மக்கள் வீதிகளுக்கு வந்து கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டியடித்ததும், ரணில் விக்ரமசிங்க அந்தப் பதவிக்கு வந்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த நெருக்கடி நிலையில் இருந்து என்ன நடந்தது? தற்போது என்ன நடக்கிறது? யார் உதவியது? யார் யார் இழுத்தடிப்புச் செய்தனர்? என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? என்பது குறித்த அடிப்படைத் தகவல்களை அறிந்திருக்க வேண்டியது முக்கியமானது.
முற்றாக வீழ்ந்துபோன பொருளாதாரம்!
ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது மிக முக்கியமானது. இதனை மையப்படுத்தியே ஒரு நாட்டின் பொருளாதாரமும், அதன் நாணயத்தின் பெறுமதியும் நிலைத்திருக்கும். இதனை மையப்படுத்தியே பொருட்களின் விலை, எதிர்கால பொருளாதார நகர்வுகள் என்று ஒரு தொடர் சங்கிலியாக இந்தப் பொருளாதாரம் இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது வெளிநாட்டு அந்நியச் செலாவணிக் கையிருப்பு என்பது சுமார் 200 – 300 மில்லியன் டொலர் வரை குறைந்திருந்தது. டொலர் இன்மையால், எரிபொருள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை மக்கள் அனைவரும் அனுபவித்துவிட்டார்கள்.
இலங்கை உலகின் மத்தியில் வங்குரோத்தான நிலையை அடைந்தது. கடன் கொடுக்க முடியாது என்று அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. கடன் பெறுவதற்கான சர்வதேச தரப்பட்டியலில் இருந்து இலங்கை கீழ் இறக்கப்பட்டது. வருமானம் இழக்கப்பட்டு, கடன் வாங்க முடியாத வங்குரோத்து நிலையை இலங்கை அடைந்தது. இவை அனைத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலை இருந்தது. காலியான கஜானாவை கொஞ்சம், கொஞ்சமாக நிரம்ப வேண்டியிருந்தது. இன்னும் இந்தத் தேவை இருக்கிறது. இதற்கு பல பணிகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது.
ஆபத்தில் உதவிய முதல் நண்பன்!
கொவிட் பெருந்தொற்றினால் உலகின் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பொருளாதாரம் வீழ்ந்தது. இலங்கை இதனால் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே திணறிய போது, இந்தியா, இலங்கைக்கு உதவ ஆரம்பித்தது. தடுப்பூசிகளை வழங்கியது. ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவியபோது, ஒட்சிசன் கப்பல்களை அனுப்பிவைத்தது. கொவிட் நெருக்கடியினால் இலங்கை மிகப் பெரிய நெருக்கடிக்குள் சிக்கியது.
அந்நியச் செலாவணி வருமானத்தை முழுமையாக இழந்தது. பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பிக்க, அனைத்து வழிகளில் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு வருடத்திற்கு முன்னர் அதாவது கடந்த வருடம் மார்ச் மாதம் மக்கள், தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இரவு பகலாக வீதிகளிலும், வரிசைகளிலும் நின்றனர். இந்த நேரத்தில் இந்தியா பெருமளவில் உதவியது. எரிபொருள், மருந்துகள், உணவுப் பொருட்கள் என அனைத்து வழிகளிலும் இந்தியா உதவியது. ஆபத்தில் உள்ள அண்டை நாட்டிற்கு உதவியதில் ஆயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனாலும் இலங்கையின் நெருக்கடி தொடர்ந்தது.
அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும், முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகை தேவையாக இருக்கிறது. பல கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் பல பணிகளை செய்து முடிக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் செய்து முடித்துவிட்டே ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ‘எனது கடமையை நான் செய்துவிட்டேன்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் முடிவு தெரியவரவிருக்கிறது. இலங்கைக்கான கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து சர்வதேச ரீதியாக பல கதவுகள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறக் கூடியதாக இருக்கும். இது நாட்டின் அந்நியச் செலாவணியை மேலும் அதிகரிக்கும். தற்போது இருக்கும் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு மேலும் அதிகரிக்கும். இது நிகழும்போது, வங்குரோத்து என்ற நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிடும். இவற்றுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகள் வழி ஏற்படுத்தியுள்ளன. இவற்றுக்கு இந்தியா பிள்ளையார் சுழிபோட்டு, ஆரம்பித்து வைத்தது. ஆபத்தில் உதவும் நண்பன் என்பதையும், அண்டை நாடு முதல் கொள்கை என்பதை இந்தியா மீண்டும் உறுதிசெய்துகொண்டது.