திருகோணமலை, இலுப்பைகுளம் பகுதியிலிருந்து யுத்தம் காரணமாக காணாமல்போய் 33 வருடங்கள் பிரிந்திருந்த கணவன் , மனைவி மீண்டும் இணைந்த சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
1990 ஆம் ஆண்டு திருகோணமலை ஏழாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது திசை மாறிச் சென்ற செல்வரட்டினம் யோகேஸ்வரி (70வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.
இந்நிவையில் இந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை வைத்து, வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.
1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பிறந்த செல்வரத்தினம் யோகேஸ்வரி (70 வயது) என்பவர் 1990 ஆம் ஆண்டு 06 மாதம் ஏழாம் கட்டை பகுதியில் காணாமல் போனதாக கோபால் செல்வரத்தினம் (74வயது) தெரிவித்தார்.
அன்று தொடக்கம் மனைவியை தேடி வந்ததாகவும் மனைவி உயிரிழந்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 26 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாரின் உதவியுடன் மனைவி உயிரோடு இருப்பதாக தெரியவந்தது.
இதனை அடுத்து அங்கு சென்றபோது மனைவியின் தோற்றம் மாறி இருந்த போதிலும் நாடியில் மச்சம் இருந்ததும் தலையில் காயம் இருப்பதையும் கண்டேன்.
அப்போது இவர் தான் என்னுடைய மனைவி எனவும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த நேரம் என்னுடைய மனதில் ஆழ்ந்த சந்தோசம் ஏற்பட்டது. இருந்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு இவர்தானா தனது தாய் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணினுடைய உறவினர்கள் நான்கு பேரின் பெயர்களை 33 வருடங்கள் காணாமல் போயிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட செல்வரட்ணம் யோகேஸ்வரி என்ற பெண் தனது பிள்ளைகள் மத்தியில் கூறியதை அடுத்து தனது தாய்தான் என உறுதிப்படுத்திக் கொண்டனர்.
அத்துடன் ஏழு வயதில் காணாமல் போன தனது தாய் 41 வயதான நிலையில் நோயுற்ற நிலையில் தம்மிடம் வந்து சேர்ந்தது தமக்கு கடவுள் கொடுத்த வரம் எனவும் அவரது மகன் எமக்கு தெரிவித்தார்.
அதே நேரம் தனது தாயின் முகத்தை காணாத நிலையில் தாயின் உறவினர்களின் உதவியுடன் தன்னை பெற்றெடுத்த தாய் இவர்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் மற்றுமொரு மகள் சந்தோசமாக தெரிவித்தார்.
தாங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தாய் இல்லாத கவலை இருந்த போதிலும் 33 வருடங்களுக்கு பின்னர் தனது தாயை கண்டது தனக்கு ஆழ்ந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தான் தொடர்ச்சியாக தனது தாயை ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டம் இலுப்பை குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு தனியாக சீவிப்பதற்கு எவ்வித வீடு மற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
குறித்த தாய் தற்போது வசித்து வரும் தனது மூத்த மகளின் நிலைமை பொருளாதார கஷ்ட நிலை மட்டுமல்லாது உளநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் அங்கு வசித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.
கிரவல் மழைக்கு கீழே வீடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட தனது தாயை பார்த்துக் கொள்வதற்கு பொருளாதார சிக்கல் மாத்திரமில்லாமல் நோயுற்ற தாயைப் பார்ப்பதற்கு கூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
ஆகவே யுத்தம் காரணமாக 33 வருடங்கள் திசை மாறி வாழ்ந்து வந்த இந்த பெண்ணுக்கு யாராவது உதவி செய்ய முன்வருவார்களா?
