கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் பாகங்கள் சதுப்பு நிலமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போய் இருந்ததாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நில்சிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பாதுகாப்பில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.