தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் உள்ள நெடுங்குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் சில வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மின் கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தோட்ட அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டிருந்தார். வீடுகள் தீக்கிரையாகியுள்ளதால் 56 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த அனைத்து உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தேவாலயம், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் லிந்துலை பொலிஸார் இணைந்து தீயை அணைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியினால் தீ ஏனைய வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
க.கிஷாந்தன், கௌசல்யா