” அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச,
” ஒற்றையாட்சியை நிலைநாட்டுவதற்காகவே மஹிந்த ராஜபக்ச 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தார். எனவே, 13 ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் மக்கள் ஆணையின் பிரகாரமே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்.
13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி பேசுவதற்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் குறித்தே கதைக்க வேண்டும். மஹிந்த ராஜபக்சவே வடக்கு, கிழக்கு மக்களுக்கு வாக்களிக்கும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுத்தார். வடக்கு, கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினார்.
மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு முன்னர், 13 அமுலில் இருந்தாலும் மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. அவரே மக்கள் பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். தற்போது அவர் பதவியில் இல்லை. மாகாசபையிலும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, 13 பற்றி கதைக்க வேண்டுமானால் முதலில் தேர்தலை நடத்துவது பற்றி பேசப்பட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.