” அரசியல் கட்சிகளை பலப்படுத்தும் நோக்கத்துக்கு அன்றி நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அதிகார பகிர்வை செய்ய வேண்டும். இன்று எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் கூட்டாக அர்ப்பணிப்புச் செய்யத் தவறினால் எதிர்காலச் சந்ததியின் சாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். ” -என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேபோல் அரசியலமைப்பின் அதிகாரத்தை அரசியல் நோக்கங்களுக்கு அன்றி நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்த வேண்டும். அதனால் அதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
கட்சி என்ற வகையில் இறுதியான யோசனைகளை நாங்கள் முன்மொழியவில்லை. அரசாங்கம் முன்வைக்கும் யோசனையை ஆராய்ந்து பார்த்த பின்னர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.