இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் அருகிலிருக்கும் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கப்பல் சேவையை இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் ஶ்ரீ சர்பானந்தா சோனோவால் அவர்கள் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொண்டும், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சு,ஜெய்ஷங்கர் அவர்கள் வீடியோ இணைப்பு மூலமாகவும் கூட்டாக ஆரம்பித்துவைத்தனர். அத்துடன், இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மெய்நிகர் மார்க்கமூடாக உரை நிகழ்த்தியிருந்தனர். இலங்கையின் துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களும் இந்த நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2. 2023 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இருதரப்பு தொடர்பினை கருப்பொருளாகக் கொண்டு இந்தியா இலங்கை இடையிலான பொருளாதாரப் பங்குடைமைக்காக கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அறிக்கையினை, இங்கு உரையாற்றியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நினைவூட்டியிருந்தார். தொடர்புகள் இருதரப்பு மக்களையும் நாடுகளையும் மேலும் நெருக்கமாக்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். 2023 செப்டெம்பரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின்போது இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வலயம் ஸ்தாபிக்கப்பட்டமையை இங்கு குறிப்பிட்டிருந்த அவர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்மாதிரி தொடர்பு மேலும் வலுவடைந்திருப்பதாகவும் இந்த இணைப்பு வலயம் ஊடாக இலங்கை மக்கள் பயனடனைவர் எனவும் தெரிவித்தார். அத்துடன் எரிசக்திப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக எரிசக்தி வலையமைப்பினை இணைப்பது குறித்தும் UPI மற்றும் Lanka Pay ஆகியவற்றை இணைப்பதனூடாக நிதியியல் தொழில்நுட்ப இணைப்பினை பேணுதல் குறித்தும் இரு அரசாங்கங்களும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய தடமான இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினை ஆரம்பிக்கவும் இரு அரசாங்கங்களும் தொடர்ந்து பணியாற்றிவருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

3. இதேவேளை இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதில் கப்பல் சேவையின் முக்கிய வகிபாகத்தை தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த சேவையினை ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட இந்திய கப்பல் கூட்டுஸ்தாபனத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.
4. மக்களை மையப்படுத்திய இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளின் உறுதிப்பாடே குறித்த கப்பல் சேவையின் ஆரம்பம் என வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி சு.ஜெய்ஷங்கர் அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார். இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையானது தொடர்புகள், ஒத்துழைப்பு, மற்றும் தொடர்பாடல்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது அத்துடன் எதிர்காலத்தில் எரிசக்தி வலையமைப்பு இணைப்பு, எண்ணெய் குழாய் அமைப்பு, மற்றும் பொருளாதார வலயத்தை ஸ்தாபித்தல் ஆகியவற்றின் மூலம் இலங்கையுடனான தொடர்பு மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், வான் மற்றும் கடல் மார்க்கமான தொடர்புகளை ஸ்தாபித்தல், இலகுவான விசா நடைமுறை, மற்றும் சுற்றுலா இணைப்புகளை வலுவாக்குதல் ஆகியவற்றின் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை மேலும் சுமூகமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

5. இதேவேளை இந்திய துறைமுகங்கள், கப்பல், மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்கள், இரு நாட்டு மக்களுக்கும் வினைத்திறன்மிக்க மற்றும் குறைந்த செலவில் பயண வாய்ப்பை வழங்கும் ஒரு வரலாற்று நடவடிக்கையென கப்பல் சேவையின் அங்குரார்ப்பணத்தினைப் பாராட்டினார். இலங்கை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ. நிமல் சிறிபால டி சில்வா அவர்கள், இலங்கையின் வட மாகாணத்திற்கு அளப்பரிய நன்மைகளைத்தரும் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
6. இந்தியக் கப்பல் கூட்டுஸ்தாபனத்தால் இயக்கப்படும் இந்த அதிவேக கப்பலில் 150 பேர் பயணிக்க முடியும். அத்துடன் நாகபட்டினம் காங்கேசன்துறை இடையிலான 60 கடல் மைல்கள் தூரத்தைக் கொண்ட இக்கன்னிப்பயணம் நான்கு மணித்தியாலங்களாக அமைந்துள்ளது. இக்கப்பலின் கன்னிப் பயணத்தின் மூலமாக காங்கேசன்துறையை வந்தடைந்த பயணிகளை இலங்கை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் ஆகியோர் வரவேற்றதுடன் அங்கிருந்து கப்பலில் புறப்பட்ட பயணிகளையும் அவர்கள் வழி அனுப்பி வைத்தனர்.











