உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன.
தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியான இந்தியா 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாட்டி 2 வெற்றி, 4 தோல்வி கண்டு 4 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் மெகா வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் வாய்ப்பு முற்றாக இல்லாமல்போய்விடும்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 167 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 98-ல் இந்தியாவும், 57-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. உலகக் கோப்பையில் 9 முறை மோதியதில் இரு அணிகளும் தலா 4-ல் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.










