புதிய வைரஸ் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு விளக்கம்!

சீனாவில் பரவும் மூச்சுத்திணறல் சம்பவங்களில் வழக்கத்துக்கு மாறான அல்லது புதுவகையான நோய்க் கிருமிகள் எதுவும் காணப்படவில்லை என்று சீனா கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் வடக்கில் அதிகரிக்கும் நியூமோனியா சம்பவங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு விபரங்களைக் கேட்ட போது சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

சீனாவில் ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து சளிக்காய்ச்சல் சம்பவங்கள் உயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முந்தைய மூன்றாண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும்.

லியாவ்நிங், தலைநகர் பீஜிங் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் அசாதாரண மருத்துவப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என சீன அதிகாரிகள் அறிவுறுத்தியதாக அமைப்பு கூறியது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், கொவிட்–19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாகக் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

மேலும் சுற்றுச்சூழலில் ஏற்கனவே அறியப்பட்ட சளிக்காய்ச்சலும் பிள்ளைகளைப் பாதிக்கும் பொதுவான கிருமியும் அதிகரிப்புக்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.

இதற்கிடையே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி, பாதுகாப்பான இடைவெளி, முகக்கவசம் முதலியவை அவற்றில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles