வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறார்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்று மகளிர் மற்றும்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எமது நாட்டில் உள்ள 13 சிறார்கள் மலேசியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு
குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றுக்கு இன்று (நேற்று) பணிப்புரை விடுத்துள்ளேன்.” – என்வும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள சிறார்கள் மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு சம்பந்தமாக சிஐடியினர் முன்னெடுத்த விசாரணைகளில் சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
விசாரணைகளின் பிரகாரம் வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான சிறார்கள் மலேசியாவுக்கு அனுப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
மலேசியாவுக்கு செல்வதற்காக சட்டப்பூர்வமான கடவுச்சீட்டுகளே பயன்படுத்தப்படுகின்றன எனவும், மலேசியாவில் வைத்தே போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு 13 சிறார்கள் இதுவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இதன் பின்புலத்தில் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன .