சிவனொளிபாதமலை யாத்திரை இம்மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்தோடு ஆரம்பமாவதையிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியன உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சிவனொளிபாதமலை யாத்திரையை கருத்திற்கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக ரயில் சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை, பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக்காலத்தையிட்டு யாத்திரைகளை மேற்கொள்வோர் மற்றும் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி நேற்று முதல் இந்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைவரை, பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைவரை மற்றும் கண்டியிலிருந்து பதுளைக்கும் பதுளையிலிருந்து கண்டிக்கும் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் நலன் கருதி ஹட்டன் ரயில் நிலையத்தில் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து நல்லதண்ணி வரைக்கும் மற்றும் நல்லதண்ணியிலிருந்து ஹட்டன் ரயில் நிலையம் வரைக்கும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் இணைந்த சேவையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத யாத்திரிகர்களின் நலன் கருதி விசேட டிக்கெட் கருமபீடங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நீண்ட விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயிலுக்கு மேலதிகமாக ரயில் சேவைகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.