மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.
ஆகவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
லக்ஸம்பேர்க் இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த J N 1 OMICRON உப பிறழ்வு தற்போது இந்தியாவில் பரவி வருகின்றது.
இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2660 ஐ கடந்துள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவிய இந்த உப பிறழ்வு தற்போது கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் J N 1 கொரோனா பிறழ்வு கவனம் செலுத்தப்பட வேண்டிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.