மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். மாலை 4.45 மணி அளவில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாக்கிழமை (டிச.28) காலை காலமானார். மியாட் வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினர். இரவு வரை அங்கே வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனால் கோயம்பேட்டில் முழுவதும் கண்ணீர் கடலாக காட்சியளித்தது.
மேலும், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பொலிஸார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கே இறுதிச் சடங்குகளுக்குப் பின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.










