“ எவரேனும் என்னிடம் சண்டித்தனம்காட்ட முற்பட்டால் தாக்கிவிட்டு சிறைச்சாலைக்கு செல்வேனேதவிர, அடிவாங்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்லமாட்டேன். “ – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பிரதேச மக்கள் வெளியிட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறினார். அவருக்கு எதிராக மக்கள் கோஷங்களையும் எழுப்பி இருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சனத் நிஷாந்த கூறியவை வருமாறு,
“ ஆனமடுவ பகுதியில் இருந்து நான் புறப்படும்போது கற்பிட்டியில் இருந்து அழைப்பு வந்தது, மகனே, இங்கு பிரச்சினையொன்று எற்பட்டது, அது உங்களுக்கு எதிரானது அல்ல, கூட்டத்துக்கு வரவேண்டாம், கூட்டம் முடிந்துவிட்டது என அருட்தந்தையொருவர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தினார்.
முதலாவது கூட்டத்துக்கு நான் செல்லவில்லை, இரண்டாவது கூட்டத்துக்கே சென்றிருந்தேன், மக்கள் என்னை விரட்டினார்கள் என்ற செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தேன். இது போலியான தகவல், இதனை நிராகரிக்கின்றேன்.
சண்டித்தனம்காட்டி எம்மை விரட்டினால் , அதற்கு அஞ்சி திரும்பி வருபவர்கள் அல்லர் நாங்கள், அடிவாங்கி வைத்தியசாலையில் இருக்கபோவதில்லை. தாக்கிவிட்டு சிறைக்குதான் செல்வேன். தேர்தல்மூலம் வேண்டுமென்றால் மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பலாம். ஆனால் சண்டியர்களுக்கு விட்டுபோக தயாரில்லை.
நாங்கள் வீட்டில் இல்லாதநேரம் எமது வீட்டை எரித்தனர், நான் வீட்டில் இருக்கவில்லை, எனது சகோதரரும் சிறையில் இருந்தார், எனவே, வீட்டை கொளுத்தியும் எம்மை அச்சம்கொள்ள வைக்க முடியாது. ஜே.வி.பியினருக்கு எம்மை விரட்ட வேண்டிய தேவை இருந்தால் நேரில் வரட்டும், பழைய கணக்குகளையும் தீர்க்க வேண்டியுள்ளது. “ – என்றார்.










