தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு டில்லியிடம் தமிழ்த் தேசிய தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா வுக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று (22) பிற்பகல் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரன், ஈபிஆர்எல்எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், வினோநோதராதலிங்கம், கோவிந்தம் கருணாகரன், சாணக்கியன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சமகால அரசியல் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தலைவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன், வடக்க, கிழக்கு மாகாணசபைகளுக்காவது தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்குமாறும், அதற்கு நிதி பிரச்சினை இருப்பின் அதனை டில்லி கொழும்புக்கு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.










