“ சர்வதேசத்தில் இருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை, போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும்.” – என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ யுக்திய செயல் திட்டத்தின் முதல் மாத நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. எனினும், யுக்திய நடவடிக்கயை முன்னெடுக்கும்போது பல தடைகளும் வருகின்றன, சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் வருகின்றன, நாட்டுக்கு எதிராக செயற்படும் சில குழுக்கள் உள்ளன, அந்த குழுக்களும் எதிர்க்கின்றன, எமக்கு எதிராக செயற்படுகின்றன, சமூகவலைத்தளங்களில் சேறுபூசுகின்றன. போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்களிடம் பணம் வாங்கும் தரப்புகளே இந்த செயலில் ஈடுபட்டுள்ளன.
யுக்திய நடவடிக்கையை நிறுத்துவதற்கு சில மதத்தலைவர்கள் முற்படுகின்றனர், சில சட்டத்தரணிகளும் தொடர்புபட்டுள்ளனர், அரசியல் கட்சிகளில் உள்ள சிலரும் தொடர்புபட்டுள்ளனர்.
அத்துடன் யுக்திய நடவடிக்கை என்பது ஊடக கண்காட்சி, நாடகம் என்றெல்லாம்கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது, அது பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை, போதைப்பொருளுக்கு முடிவு கட்டும்வரை எமது பணி தொடரும். ஒரு அடிகூட பின்வாங்கமாட்டோம்.” – என்றார்.










