இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர சந்தோஷ் ஜா , 2024 ஜனவரி 18 ஆம் திகதி கண்டிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் நல்லாசிகளை பெற்றுக்கொண்டார்.

இந்தியா இலங்கை மக்களுக்கு இடையிலான புராதன பிணைப்பின் மையப் பகுதியில் பௌத்தம் இருப்பதாக இச்சந்திப்புக்களின்போது சுட்டிக்காட்டியிருந்த உயர் ஸ்தானிகர், இருதரப்பு பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் மகாநாயக்க தேரர்களுக்கு விவரித்திருந்தார்.

அதேபோல இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நாடளாவிய ரீதியில் இருக்கும் ஆலயங்களை சூரியக்கல மின்சக்தி மூலம் இணைக்கும் திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து இருநாட்டு மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆசிவேண்டியும் அம்மக்களிடையேயான தொடர்பினை வலுவாக்க வேண்டியும் உயர் ஸ்தானிகர் தலதா மாளிகையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்அதனை அடுத்து ஹந்தானை தோட்டப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டிருந்தார்.

இத்தோட்ட பிரிவில் மூன்றாவது கட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் 50 வீடுகள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலையில் வீடமைப்பு திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ் இன்னும் பல வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் கீழ் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு கட்டங்களாக மொத்தம் 14 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா உறுதி அளித்துள்ளது.
பெருந்தோட்ட மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ஆயுர்வேத முகாம் ஒன்றும் உயர் ஸ்தானிகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் அத்தோட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் குடைகளும் வழங்கப்பட்டிருந்தன.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவே இவ்வாறான செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.











