தேரரை கொலை செய்தவர்கள் பயணித்த கார் தீக்கிரையான நிலையில் காட்டு பகுதியில் வைத்து மீட்பு!

பௌத்த தேரரை சுட்டுக்கொலை செய்வதற்காக வந்தவர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் சொகுசு கார், கடுவெல, கொடல்ல பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணமுடியாத வகையில் குறித்த கார் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயணித்த வாகனமா இது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சந்தேக நபர்கள் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடுக்கு உரித்தான வாகனமொன்று பானந்துறை பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் இருந்துள்ளது.

எனவே , களவாடப்பட்ட காரை, இலக்கத்தகடை மாத்திக்கொண்டு கொலையாளிகள் பயணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள விகாரைக்குள் இன்று (23) முற்பகல் நுழைந்த நபர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்தே, குறித்த குழுவினர் விகாரைக்குள் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா, கஹடான கனாராம விகாரையில் தற்காலிகமாக பணியாற்றிய 45 வயதான கலபலுவாவே தம்மரத்தன தேரர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தம்மரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றில் வந்த நால்வர் ரி – 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த குற்றத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து 02 துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கலபலுவாவே தம்மரத்தன தேரர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே, கஹடான கனாராம விகாரைக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Related Articles

Latest Articles