இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா வுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இந்திய தூதுவர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

“ மிகவும் தொன்மைமிக்க இந்திய இலங்கை நட்புறவை, எதிர்காலத்தில் தொடர்புகள், பசுமை எரிசக்தி மற்றும் முதலீடுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்து உயர் நிலைக்கு கொண்டுசெல்லல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.” – என்று இந்திய தூதரகத்தின் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
