நிர்வாணப் படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுதல் உட்பட இணைய குற்றங்கள் தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 686 முறைப்பாடுகளும், நிர்வாணப் படங்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் 506 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், லட்சத்துக்கு மேற்பட்ட நிர்வாணப்படங்கள் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட ரீதியில் அவதூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் 697 முறைப்பாடுகளும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும், சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆயிரத்து 961 முறைப்பாடுகளும், தகவல் திருட்டு தொடர்பில் 547 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 88 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நிதி மோசடி தொடர்பில் 657 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல் அல்ல அவர்களின் மனைவிமார், பிள்ளைகளை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.
இவற்றை தடுப்பதற்கு எமக்கு சட்டம் அவசியம். சிஐடிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையே நான் தெரியப்படுத்தினேன், இதற்கு புறம்பாக பொலிஸ் மகளிர் பிரிவுக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.” – என்றார்.
