அட்டுலுகமவில் அரங்கேறிய கொடூரம் – கொலையாளிக்கு 27 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!

பாணந்துறை, அட்டுலுகம பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு, மே மாதம், 9 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை இன்று விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமாரவினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

கொலை மற்றும் சிறுமியை அவரது தாயின் வசம் இருந்து கடத்திச் சென்றதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த நபர், உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்காவிட்டால், மேலும், ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

27.05.2022 அன்று, வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது, சிறுமியை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அருகிலுள்ள காட்டிற்கு குற்றவாளி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார், இதன்போது போது அவர் அலறியுள்ளார்.இதனால் பயந்து, சிறுமியை சதுப்பு நிலத்தில் புதைத்து கொன்றுள்ளதுடன், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் தந்தையின் நண்பர் என்றும், சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருபவர் என்றும், அதனால் சிறுமி எந்தவித அச்சமும் இன்றி குற்றம் சாட்டப்பட்டவருடன் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எம்.எவ்.எம். அலி

Related Articles

Latest Articles