கொட்டகலை பிரதேச சபை பராமரிப்புக்குட்பட்ட பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலக்கூடம் பொது மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசல கூடத்தின் பராமரிப்பு தொடர்பில் கொட்டக்கலை பிரதேச சபை உரிய அவதானம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலைக்கு இந்த மலசல கூடம் சென்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பத்தனை சந்தியிலிருந்து நுவரெலியா, நாவலப்பிட்டி,ஹட்டன் பகுதிக்கு செல்லும் பயணிகள் மற்றும் இச் சந்தியில் அமைந்துள்ள காட்டு மாரியம்மன் ஆலயத்திற்கு தரிசனத்துக்காக வரும் ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த பொது மலசலக்கூடத்தை பாதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பத்தனை சந்தியில் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுப்படும் சாரதிகள்,சென் கிளயார், ஹோட்டல்,டெவோன் நீர்வீழ்ச்சி என பார்வையிட உல்லாச பயணிகளாக வருவோர் மற்றும ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு வருவோர் என பலரும் தமது அவசர தேவைக்காக பாவிக்கும் பொது மலசல கூடமாக இது காணப்படுகிறது என சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் இந்த பொது மலசல கூடத்தை பராமரித்து அதில் வரும் வருமானத்தை கொட்டக்கலை பிரதேச சபை அபிவிருத்திக்கு பெற்று வந்துள்ளனர்.
இருந்த போதிலும் தற்போது இந்த பொது மலசல கூடத்தின் சுகாதார பராமரிப்பில் கவனம் செலுத்தாததால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த மலசல கூடத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியாத வகையில் சீர் கேடாக இருக்கிறது இது குறித்து பிரதேச மக்கள் கொட்டக்கலை பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தும் நடவடிக்கைகள் எடுத்ததாக இல்லை என தெரிவிக்கும் பிரதேச மக்கள் பிரதேசசபை களைக்கப்பட்ட பின் செயற்படும் சபை செயலாளர் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் கூட இந்த மலசல கூடத்தின் சீர்கேடு விடயத்தை கண்டுகொள்வதில்லை.
இந்த நிலையில் இது குறித்து மாகாண ஆளுனரின் கவனத்திற்கும்,பிரதேச பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளின் கவனத்திற்கும் பிரதேச மக்கள் தெரிவிக்கவுள்ளதாகவும் இவர்களும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்.