பண்டாரவளை, பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று தினம் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதுடைய பல்லகெட்டுவ பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் சுமார் 12. 40 மணியளவில் வீடொன்றுக்கு அருகாமையில் சிசு ஒன்று சடலமாக கிடப்பதாக பலகட்டுவ பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. பின்னர் உடனடியாக ஸ்தானத்துக்கு விரைந்த பல்லகெட்டுவ பொலிஸ் குழுவினர் சிசுவின் சடலத்தை மீட்டதோடு விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சந்தேகத்துக்கிடமாக சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த சிசு (17/02 ) அன்று தனக்கே பிறந்ததாகவும் பிறக்கும்போதே இறந்து பிறந்ததினால் தனது வீட்டு முற்றத்தில் சிறிய குழி தோண்டி புதைத்ததாகவும், சடலத்தை நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் சிசுவின் சடலத்தை அவதானித்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள வாகனம் கழுவும் இடத்தில் தொழில் செய்து வருவதாகவும், குறித்த பெண் ஆங்காங்கே கூலி வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கு உரிய பெண்ணை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தப்பட உள்ளதாகவும், சிசுவின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பல்லகெட்டுவ பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பல்லகெட்டுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா










