லயன் குடியிருப்புக்குள் ஜனாதிபதியால் செல்ல முடியுமா? ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று (22) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, போசகர் ஜெகதீஸ்வரன் உபத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், காரியாலய உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,

“தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு இ.தொ.கா ஒருபோதும் எதிரானது அல்ல. யார் அரசாங்கத்திற்கு வந்தாலும், அவர்களின் நோக்கமும் செயற்பாடுகளும் மக்களுக்குச் சாதகமாக இருந்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும், தவறுகள் இருந்தால் ஆலோசனைகளையே முன்வைப்போம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா?

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பகிரங்கப்படுத்துமாறும்
அத்தோடு வேதன அதிகரிப்புக்குரிய உடன்படிக்கை பகிரங்கப்படுத்தப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்திள்ளது எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செயற்பட்ட அனுபவம் இ.தொ.காவிற்கு நீண்ட காலமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். கடந்த ஒரு வருடமாக பாராளுமன்றத்திலும், கட்சியிலும், மக்கள் மத்திலும் தாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அனைவரும் அறிவார்கள்.

2024 ஆம் ஆண்டு தாம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் காணி உரிமைக்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதைக் கேள்வியெழுப்பியிருந்தேன், இன்று தற்காலிக தீர்வான சம்பள உயர்விற்காக அதே நிதி பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இதனை எடுத்துச் சொன்னால் இ.தொ.கா சம்பள உயர்விற்கு எதிரானது என தவறாக பிரச்சாரம் செய்கின்றார்கள்.

2020 ஆம் ஆண்டு 750 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், 2024 ஆம் ஆண்டு 1,000 ரூபாவிலிருந்து 1,350 ரூபாவாகவும் அடிப்படை சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது இ.தொ.காவே. அன்று 2,138 ரூபா சம்பளம் வேண்டும் எனக் கூறியவர்கள், இன்று 1,750 ரூபாவை வெற்றியாகக் கூறுவது தொழிலாளர்களுக்கான துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளது.

மேலும், தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பிற்காக,
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தேன் என்பதனை ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

ஜனாதிபதியிடம் மலையகம் தொடர்பான முழுமையான தகவல்கள் சரியாக கொண்டு செல்லப்படவில்லை என்பதே பிரச்சினையின் மூலக் காரணம், டித்வா புயலுக்குப் பின்னரான நிவாரண நடவடிக்கைகளையும் அதற்கான உதாரணமாக எடுத்துக்காட்டலாம்.

தற்போதைய அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது, ஆளும் கட்சி மலையக பிரதிகள் அரசாங்கத்திற்குள் தலையாட்டி பொம்மைகளாக மட்டுமே உள்ளார்கள்.

தோட்டங்களில் தொழிலாளர்களின் வேலைக்கு தடையாக இருப்பது அரசாங்கமோ, அரசியல்வாதியோ, தொழிற்சங்கமோ அல்ல; பெருந்தோட்ட நிறுவனங்களே!, மலையக மக்களிடையே பிரிவினையை உருவாக்கியதும் அந்த நிறுவனங்களே என வலியுறுத்தினேன். இனி பிரிவினைகளை தள்ளி வைத்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார்

Related Articles

Latest Articles