முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதான அன்ரனி ஜோர்ச் என்பவரே உயிரிழந்தவராவார்.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பழைய கொலணிப் பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்று சென்ற பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் 5 மாணவர்களையும் கொட்டியுள்ளன.
குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
குளவித் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
