டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது குறித்து ஆராய்வு!

‘தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் நேற்று (ஏப்ரல் 26) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் இடைக்கால தங்குமிடங்களை அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் , அவற்றைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தல் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது.

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேரை பாதுகாப்பான மற்றும் வசிக்கத் தகுந்த தங்குமிடங்களில் தற்காலிகமாக மீள்குடியேற்றுவதாகும். இலங்கை இராணுவத்தின் (SLA) பொறியியல் நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி, கட்டுமானப் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி குறுகிய காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பானது அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், உரிய நேரத்தில் இப்பணியை நிறைவு செய்வதை உறுதிசெய்யும் வகையில், தெளிவான கால அட்டவணையுடன் கூடிய விரிவான செயலாக்கத் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRI) உதவியுடன், கட்டுமானப் பணிகளுக்குப் பொருத்தமான நிலங்களைக் கண்டறியும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் அதே வேளையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தர உறுதிப்பாடு ஆகியவற்றைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இராணுவத் தளபதி, சிரேஷ்ட அமைச்சு அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய வீட்டுவசதி அபிவிருத்தி அதிகார சபை (NHDA), தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles