ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளராக கார்த்தீஸ்வரன் (ஈசன்) ஐ.ம.ச. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் நேற்று (09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளரும் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சமிந்த விஜயசிரி ஆகியோர் உடனிருந்தனர்.
பசறை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்தீஸ்வரன் நீண்ட கால அரசியல் தொழிற்சங்க அனுபவமிக்கவர் .
பசறை பிரதேச சபையின் உறுப்பினராக பதவி வகித்த காலப்பகுதியில் தனது மாதாந்த வேதனத்தை கனவரல்ல வட்டார அபிவிருத்திக்காக பயன்படுத்தி முன்மாதிரி செயற்பட்டதோடு தொகுதியில் உள்ள மூவின மக்களுடன் சிறந்த உறவைப் பேணி சமூகப் பணிகளிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரை தனது அரசியல் குருவாகக் கொண்டு செயற்பட்டுவரும் இவர் பசறை தேர்தல் தொகுதியை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் வெற்றி பாதையில் கொண்டு செல்வதற்கான திட்டமிடல்களுடன் தொகுதியின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
பசறை நிருபர்
