இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
முதல் போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று 2 -1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து தொடரை வென்றுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 357 ஓட்டங்களைப் பெற்றது.
358 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பெத்தும் நிஸ்ஸங்க (50), காமில் மிஷார (22) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும், காமில் மிஷார, குசல் மெண்டிஸ் (20), பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
துடுப்பாட்ட வரிசையில் தரம் உயர்த்தப்பட்ட பவன் ரத்நாயக்கவுடன் அணித் தலைவர் சரித் அசலன்க (13) அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார். ஆனால் மொத்த எண்ணிக்கை 131 ஓட்டங்களாக இருந்தபோது நான்காவதாக சரித் அசலங்க ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ஜனித் லியனகே (22) அநாவசியமாக இல்லாத ஒரு ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனதுடன் சற்று நேரத்தில் தனஞ்சய டி சில்வா (9) ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்கவும் துனித் வெல்லாகேயும் 7ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை கௌரவமான நிலையில் இட்டனர்.
வெல்லாலகே 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்து களம் புகுந்த வனிந்து ஹசரங்க 9 ஓட்டங்களுடன் இலகுவான பிடிகொடுத்து வெளியேறினார்.
இந் நிலையில் பவன் ரத்நாயக்கவுக்கு சதம் குவிக்க முடியாமல் போகுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ஜெவ்றி வெண்டசே (14) ஒரு பக்கத்தில் தாக்குப்பிடித்து பவன் ரத்நாயக்க சதம் குவிக்க உதவினார்.
கடைசிவரை போராடிய பவன் ரத்நாயக்க 115 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ{டன் 121 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கை மண்ணில் இலங்கைக்கு எதிராக 300 ஓட்டங்களுக்கு மேல் இங்கிலாந்து குவித்தது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
