மலையக கல்விசார் சமூகத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்

மலையக மாணவ மற்றும் கல்விசார் சமூகத்தின் முன்னேற்றம் கருதி அரச மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் நேரில் எடுத்துரைத்துள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், ஆசிரியர் பற்றாக்குறைக்கான வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குதல் ஆகிய விடயதானங்கள் குறித்து ஆவன செய்யுமாறு மகஜர் ஊடான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.

மலையக சமூகத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து
விஷேட கந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மன்றத்தின் தலைவர், போஷகர்கள், பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மலையகம் சார்ந்து பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

அவற்றில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி அபிவிருத்தியை வலுப்படுத்துதல்,
பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் பல்வேறு கல்விசார் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, ஏனைய வளப்பற்றாக்குறைகள், மாணவர்களின் இடைவிலகல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் மன்றத்தின் பிரதிநிதிகளால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் மலையக சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரச அங்கீகாரம் வழங்குதல், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புதல், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி வாய்ப்புகள் மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மலையக மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதுடன், அவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மன்றத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, மன்றத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles