வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: லுணுகல பகுதி பெண்ணை ஏமாற்றியவர் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, லுணுகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கடந்த 3ஆம் திகதி கொடகவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய, கொடகவெல பகுதியைச் சேர்ந்த 53ஆம் இலக்க முகவரியில் வசிக்கும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் லுணுகல பகுதியில் வசித்த காலத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பெற்று பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டு லுணுகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர் கொடகவெல பகுதியில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லுணுகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மாறுவேடத்தில் அப்பகுதிக்குச் சென்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊவா மாகாணத்தைப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பதுளை பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜேசேன, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண, உதவி பொலிஸ் அத்தியட்சகர் (II) பண்டார மற்றும் லுணுகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.எம். அபேபால ஆகியோரின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் சார்ஜென்ட் பிரேமரத்ன (35363), பொலிஸ் சார்ஜென்ட் பண்டார (13592) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டார (93338) ஆகியோர் இணைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லுணுகல பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

த.டிமேஷன்

Related Articles

Latest Articles