நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ளார். சம்யுக்தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவன் மற்றும் கர் தயாரிக்கின்றனர்.
மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஏப்.10-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில், இதற்காக நடந்த விழாவில், படம் பற்றி ஹீரோ நிகில் சித்தார்த்தா கூறும்போது, “இந்திய வரலாற்றின் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான அம்சமான செங்கோலின் வரலாற்றிலிருந்து உருவான கதைதான் இப்படம்.
இந்திய நாடாளுமன்றத் தொடக்க விழாவின் போது அங்கு செங்கோல் நிறுவப்பட்டதை அறிவோம். ஆனால் செங்கோலுக்குப் பின்னால் உள்ள வரலாற்றைப் பலர் அறிந்திருக்கவில்லை. இது நேர்மையான, நெறி வழுவாத ஆட்சியின் சக்தியைக் குறிப்பது. இந்த செங்கோலுக்கு சோழ பேரரசு உள்ளிட்ட இந்தியப் பேரரசுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதைச் சுற்றியும் ஹீரோவைச் சுற்றியும் உருவாக்கப்பட்டுள்ள கற்பனையான கதைதான் சுயம்பு” என்று கூறியுள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் 2 பாகங்களாக வெளியாகிறது.இப்படம் பற்றி இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி, “இது சில வரலாற்று நாயகர்களைப் பற்றிய கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் கற்பனை கதை” என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.
