சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.
ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த விஜயத்தின் போது, அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சீர்திருத்தத் திட்டங்களுக்காகத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும் தூதுக்குழுவினர் அரசாங்கத்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் உறுதியளித்தனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 07 ஆவது மீளாய்வின் போது, இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டிய ஏனைய பொறுப்புகள் இந்த மீளாய்வுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள வெளிப்புற சவால்களை வெல்வதற்கும், நிதி மற்றும் வெளிப்புற ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதற்கும், அதே போல் நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சீர்திருத்த செயல்முறையின் வேகத்தைத் தொடர்ந்து பேணுவது இன்றியமையாதது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில், பொருளாதார மீட்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதுக்கு வழிவகுப்பதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
பொருளாதார வளர்ச்சியை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்காவின் வரிக் கொள்கைகள், ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்தச் சூழ்நிலை உள்ளிட்ட வெளிப்புற அதிர்ச்சிகளால் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குக் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், நாட்டை மீட்சிப் பாதையில் உறுதியாகக் கொண்டு செல்வதற்குக் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பலன்கள் அனைத்து பிரஜைகளையும் சென்றடைவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நீண்ட காலத் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களுக்கு இணங்குவது அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மக்கள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்கும் வகையில் அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே நிலவும் நெருக்கமான மற்றும் சாதகமான உறவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒட்டுமொத்த காலப்பகுதியிலும் இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளதாகவும், அந்த பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக சீர்திருத்தத் திட்டத்தை எந்தவொரு தடையுமின்றி சுமூகமாக முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன்போது, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும், நாட்டில் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான இரு தரப்பினரதும் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு கலந்துரையாடல் நிறைவுற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவில், அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா, செயற்பாட்டுப் பிரதானி ஈவான் பாப்பகியோர்கியு, IMF இன் இலங்ககான நிரந்தரப் பிரதிநிதி மார்த்தா வோல்டெமிக்கேல் (Martha Woldemichael), என்ரிக் புளோரஸ் குரியல் (Enrique Flores Curiel), உர்சுலா விறியடினாதா (Ursula Wiriadinata), யொர்போல் யக்ஷிலிகோவ் (Yorbol Yakhshilikov), மாக்சிம் மார்கேவிச் (Maksym Markevych) மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.










