LPL தொடரிலிருந்து கிறிஸ் கெயில், மாலிங்க விலகல்!

லங்கா ப்ரமியர் லீக் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து விச்சாளர் லசித் மாலிங்க மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட விரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கட்டும் இந்தத் தொடரில் இருந்து விலகியோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கெயில் மற்றும் பிளங்கட் விலகியதை அவர்களின் அணியான கண்டி டஸ்கர்ஸ் உறுதி செய்துள்ளது. போதுமான தயார்படுத்த நேரம் இல்லையெனக் கூறியே மாலிங்க விலகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது 41 வயதாகும் கிறிஸ் கெயில் கடந்த மாதம் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது கண்டி டஸ்கர்ஸ் அணி மூலம் வாங்கப்பட்டார்.
அதன்படி, கிறிஸ் கெயிலின் வருகை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடவிருக்கும் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு மிகப் பெரும் பலமாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையிலேயே, அவர் தொடரிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும், கிறிஸ் கெயில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியமைக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், கிறிஸ் கெயிலின் விலகல் காரணமாக கண்டி டஸ்கர்ஸ் அணி நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியிருக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் மாற்று வீரர் ஒருவரினை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதோடு மிகப் பெரிய இழப்பு ஒன்றினையும் சந்தித்துள்ளது.
கடைசியாக 2020ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியிருந்த கிறிஸ் கெயில் இந்தப் பருவகாலத்தில் 7 போட்டிகளில் பங்கேற்று 288 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை டி-20 அணித் தலைவரும் காலி கிளாடியேட்டர் அணிக்கு தலைமை வகிக்க இருந்தவருமான மாலிங்க, தாம் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் எந்தப் பயிற்சியும் இன்றி உயர்மட்ட கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடுவது மிகக் கடினமானது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles