மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமா கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ தலைமையில் இதற்குரிய குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர்,அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
“மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவுகின்ற போர் நிலைமையால் பொருளாதாரத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறு உலகளாவிய ரீதியில் உறுதிப்பாடற்ற சூழல் உருவாகியுள்ளது.
மிகவும் சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை வலுசக்தி இறக்குமதி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைக்கின்ற பண அனுப்பல்கள் மற்றும் அப்பிராந்தியத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளில் தங்கியிருப்பதால், வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இந்நிலைமையில் இலங்கை பொருளதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், பல்வேறு துறைகளில் ஏற்படக்கூடிய இடர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நிலைமையைத் தொடர்ந்து மீளாய்வு செய்து, அதற்கமைய மேற்கொள்ள வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பர்னாந்து தலைமையிலும் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கூடிய பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










